நெல்லை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர் - பாதுகாப்பான இடம்தேடி வெளியேறும் மக்கள்

நெல்லை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர் - பாதுகாப்பான இடம்தேடி வெளியேறும் மக்கள்
நெல்லை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர் - பாதுகாப்பான இடம்தேடி வெளியேறும் மக்கள்

நெல்லை தெற்கு பாலபாக்யா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முழுமையும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலை வந்ததால் உபரிநீர் அணைகளில் இருந்து திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து விவசாயத்திற்கு நீர் செல்லும் ஏழு கால்வாய்களும் வெள்ளப்பெருக்காய் காட்சியளிக்கிறது. அதில் ஒன்றான கோடகன் கால்வாய் மூலம் நெல்லை டவுனில் கண்டியபேரி குளம் நிரம்பி வெளியேறும் நீர் டவுண் காட்சி மண்டபம் பகுதியை சுற்றியுள்ள தெருக்களில் குடியிருப்பு பகுதிகளை கடந்த வாரம் சூழ்ந்தது.

இதனை தொடர்ந்து நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்திருந்த அமலைச் செடிகளை அதிகாரிகள் அகற்றியதால், வீடுகளை சூழ்ந்த மழை வெள்ள நீர் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். கடந்த வியாழனன்று வெளியேறிய மக்கள், இரண்டு நாட்களாக மழை குறைந்ததால் நேற்று மாலை அவரவர் வீடுகளில் குடியேறினர்.

இந்த நிலையில், நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மற்றும் அணைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை முதல் மீண்டும் காட்சி மண்டபம் மற்றும் சுற்றி உள்ள தெருக்களில் வீட்டை சுற்றி தண்ணீர் உயர ஆரம்பித்தது. காட்சி மண்டபம் அடுத்த பகத்சிங் தெருவில் கால்வாய் ஓரம் சிறிய குடியிருப்பில் வசிப்பவர் சுடலி, கணவர் கூலி தொழிலாளி. மகள் 7 மாத கர்ப்பிணி. கடந்த வாரம் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் காரணமாக, மகளை மற்றும் மகனையும் அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று மாலைதான் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று மதிய வேளைக்கு தேவையான உணவு சமைத்தவர் மதிய வேளையில் வீட்டை சுற்றி மீண்டும் வெள்ள நீர் உயர ஆரம்பித்ததால் சமைத்த உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு மாற்று உடைகளை பொட்டலமாகக் கட்டிக் கொண்டு தன் மகன் மற்றும் கணவருடன் தன் மகளை பத்திரமாக வைத்திருக்கும் உறவினர் வீட்டை நோக்கி புறப்பட்டார். மறுபுறம் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர் வீட்டிற்குள் நுழைய தொடங்கியது.

அதேபோல், நெல்லை சந்திப்பு, தெற்கு பாலபாக்யா நகர், வடக்கு பாலபாக்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து தெற்கு பாலபாக்யா நகரைச் சேர்ந்த மஞ்சுளா கூறும்போது கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இந்த மழை நீரை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத அவலநிலை உள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com