கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்: கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறும் மக்கள்
திருவள்ளூர் அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு கிராமமே நீரில் மூழ்கியுள்ளது.
ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊத்துக்கோட்டையில் இருந்து பெரிய பாளையம், பொன்னேரி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து பழவேற்காடு பகுதியில்தான் இந்த ஆரணி ஆறு கலக்கும்.
அந்த வகையில் பழவேற்காடுவுக்கு முன்பாக உள்ளபகுதிதான் பிரளயம்பாக்கம். அப்பகுதியில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த தடுப்பணையை பலப்படுத்தும் விதமாக மண்ணை கொண்டு கரை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்ட கனமழை காரணமாக மண் அரிக்கப்பட்டு பிரளயம்பாக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 500 ஏக்கர் நெற்பயிற்கள் நீரில் மூழ்கி சேதமாகின. இதனால் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும், வருவாய்த்துறையினர் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.