மேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு?
மேட்டூர் அணைக்கு இன்றிரவுக்குள் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என்பதால் தமிழக மாவட்டங்களுக்கு மத்திய ஜலசக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மாண்டியா, தும்கூர், ஷிம்சா நதி ஆகியவற்றில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏற்கனவே நிரம்பியுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், மேட்டூருக்கு நீர் வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இது மாலையில் 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, இரவுக்குள் 50 ஆயிரம் கனஅடியாக உயரும் என்றும் மத்திய ஜலசக்தி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணையும் அதன் முழுக் கொள்ளளவை எட்டி விட்டதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை ஜலசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

