தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்துவரும் கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் உபரிநீர் அடுத்த 2 நாட்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கரூர் மாவட்டத்தின் திருமுக்கூடலுக்கு 2.6 லட்சம் முதல் 2.8 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வர வாய்ப்பு உள்ளதாகவும் மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து 2.8 லட்சம் கனஅடி வரை நீர்வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர் என தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

