கன்னியாகுமரி: இடைவிடா மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; நீரில் மூழ்கிய வாழைமரங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. 8 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வாழை மரங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
அரபில் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. திக்குறிச்சி சிதறால் சாலை வள்ளகடவு பகுதியில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் வடியாவிட்டால், வீடுகள் அடித்துச் செல்லப்படும் அபாயம் இருப்பதாக அங்கு வசிப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.
இடைவிடா மழையால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.12 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 8 ஆயிரம் பரப்பளவிலான வாழை மரங்கள் மழைநீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 200 ஏக்கர் அளவுக்கு ரப்பர் மரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனிடையே, தொடர்ந்து பொழிந்துவரும் மழையால், கன்னியாகுமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், தண்ணீர் பேரிரைச்சலுடன் கொட்டுகிறது. இந்தக் கண்கொள்ளாக்காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் கூடுவது வழக்கம். ஆனால், முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், திற்பரப்பு அருவிப் பகுதியில் ஆள் நடமாட்டமே கிடையாது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வழக்கமாக ஆற்றில் குளிக்கும் தனியாருக்குச் சொந்தமான ஒரு யானை, கரையோரம் நின்று குளித்தது.

