16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டில் அடைத்து வைத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை?
சென்னையில், வீட்டில் இருந்து மாயமான சிறுமியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான பெண், தனது தாய் மற்றும் 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில், பாட்டியுடன் சண்டையிட்ட சிறுமி வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து தாய் அளித்த புகாரின்பேரில் சிறுமியை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, வியாசர்பாடியை சேர்ந்த ஜெபினா, புளியந்தோப்பை சேர்ந்த முபினா பேகம், வேப்பேரியைச் சேர்ந்த நிஷா ஆகியோர் வேலை வாங்கித் தருவதாகக் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அங்கிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், 3 பெண்களையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.