சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு தயாரிப்பின் போது ரசாயன கலவை மருந்தினை செலுத்தும் போது விபத்து நேரிட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் கலா, முருகேஷ்வரி, விஜயா, பவுல்ராஜ், சண்முகவேல் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மூர்த்தி என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் இடிந்து விழுந்தன. விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பட்டாசு ஆலையின் உரிமையாளர் சக்தி சண்முகம் மற்றும் மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வேம்பகோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர் மகேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.