அலையாத்தி காடுகளை அழித்து மேம்பாலம் கட்டும் பணி... எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்

அலையாத்தி காடுகளை அழித்து மேம்பாலம் கட்டும் பணி... எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்

அலையாத்தி காடுகளை அழித்து மேம்பாலம் கட்டும் பணி... எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்
Published on

எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதற்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அலையாத்தி காடுகளை அழித்து மேம்பாலம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மேட்டூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே மேம்பாலம் உள்ள நிலையில், காட்டுப்பள்ளி பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இன்றி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் மண்ணை கொட்டி மேம்பாலம் கட்டப்பட்டால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் கடலுக்குச் செல்வது தடைபடும் எனக் கூறும் எண்ணூர் பகுதி மீனவர்கள், இதனால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் அபாயம் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அலையாத்தி காடுகள் அழிக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். ஆற்றை கடக்கும் போது படகுகள் தரையைத் தட்டி விபத்துக்குள்ளாகும் என வாதிடும் இப்பகுதி மீனவர்கள் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் கட்டுமான பணியை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேம்பால கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு துறைமுக அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மீண்டும் கட்டுமான பணிகளை தொடர முயற்சித்தால் சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com