காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் போராட்டம்
ஒகி புயல் நேரத்தில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கக் கோரி சென்னையிலும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தாலும் மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆட்சியர் அளித்த உறுதிமொழியை
ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் காணாமல் போன குமரி மாவட்ட மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நொச்சிக்குப்பத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். குமரி மாவட்ட மீனவர்களும் எங்களின் உறவினர்கள் தான் என தெரிவிக்கும் அவர்கள், மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். ஈரான், ஓமன் உள்ளிட்ட வெளிநாட்டு கடற்பகுதிகளிலும் சென்று மீனவர்களை தேட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

