அரசு கண்டுகொள்ளாததால் சொந்த பணத்தில் துறைமுகத்தை தூர்வாரும் மீனவர்கள்
தூத்துக்குடியில் மணல் மேடாக மாறிய மீன்பிடித் துறைமுகத்தை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மீனவர்களே சொந்த நிதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக் கொண்டு சுமார் 250 விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றது. மீன்பிடித் துறைமுகத்திற்குள் விசைப்படகுகள் வரும் நுழைவு வாயில் பகுதி தூர்ந்து மணல் மேடாக மாறியதால் படகுகள் துறைமுக பகுதிக்குள் வந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டன. முன்பு ஒரே நேரத்தில் 3 விசைப்படகுகள் வந்து செல்லும் நிலையில் இருந்த பாதை தூர்ந்து போய் மணல் மேடாக மாறியதால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறையினரிடம் துறைமுக பகுதியினை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு ஒழுங்குறை மீன்பிடி சட்டத்திற்கு உட்பட்ட முறையில் விசைப்படகு மீன்பிடித் தொழில் செய்யும் விசைப்படகு உரிமையளர்கள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த நிதியில் மீன்பிடித்துறைமுகத்தில் தூர்ந்து போய் மணல் மேடான பகுதியினை பொக்லைன் இயந்திரத்தினை கொண்டு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு ஒழுங்குமுறை மீன்பிடி சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட விசைப்படகுகளை துறைமுக பகுதிக்குள் நிறுத்தும் வகையில் சுமார் 3 ஆயிரம் மணல் நிரப்பி சாக்கு மூட்டைகளை கொண்டு தற்காலிக தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளையும் அவர்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது தற்போது மீன்பிடித் துறைமுக மேலாண்மை குழுவின் சேமிப்பு நிதியில் இருந்து தூர்வரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மீன்பிடித் துறைமுக பகுதி முழுவதையும் தூர்வாரி ஆழப்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்றனர்.