கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 8 மீனவ கிராம மக்கள் அறவழிப் போராட்டம்!

கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் பகுதியில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள், அனல் மின் நிலையத்தை நோக்கி நடத்திய முற்றுகை போராட்டம் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அறவழிப் போராட்டமாக மாறியது.
மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம் Twitter

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கொசஸ்தலை ஆற்றில், வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மின் கோபுரம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து எண்ணூர் மீனவர்கள் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு கடந்த ஜூலை 26 ஆம் தேதி படகில் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 8 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் இன்று (ஆக.3) அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

கொசஸ்தலை
கொசஸ்தலை

மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுக பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றுலும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், மீன் இனப்பெருக்கம் மற்றும் மீன்களின் வாழ்விடமான ஆறு, கழிமுகப் பகுதிகளில் கட்டுமான கழிவுப் பொருட்களை கொட்டுவதால் மீன்வளம் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவான்மையூர் பகுதியில் இருந்து பழவேற்காடு வரை உள்ள 40க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர். எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று அனல் மின் நிலையத்தை முற்றுகையிட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் அனல்மின் நிலையத்தை நோக்கி 2 கி.மீ. தூரம் வரை நடந்து ஊர்வலமாக சென்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாழங்குப்பம் பகுதியில் உள்ள வியாபாரிகள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மீனவ சமுதாய மக்கள் பிரதிநிதியுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீனவர்கள் அறவழிப் போராட்டமாக மாற்றினர்.

அனல் மின் நிலையத்துக்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் அமைத்து இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரணியாக வந்த மீனவ மக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த பின்பு அமைதியாக கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com