கிணற்றில் குளித்தபோது சிறுவனின் மூக்கில் புகுந்த 'ஜிலேபி' மீன்!
கிணற்றில் குளித்தபோது சிறுவனின் மூக்கில் புகுந்த மீன் குஞ்சை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மருத்துவர்கள் உயிருடன் வெளியே எடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார். அவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அருள்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த சிறுவனின் மூக்குக்குள் ஏதோ உள்ளே சென்றதுபோல் இருந்துள்ளது. இதனையடுத்து சிறுவனுக்கு மூக்கில் அதிக வலி ஏற்பட்டு துடித்துள்ளான்.
அதனைத்தொடர்ந்து அருள்குமாரை உடனடியாக அருகே இருந்தவர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அருள்குமாரை பரிசோதித்த மருத்துவர் கதிர்வேல், அவரின் மூக்கிற்குள் சோதனை செய்தார். அப்பொழுது உள்ளே ஏதோ ஒன்று இருப்பதுபோல் தெரியவந்தது.
பின்னர் சிகிச்சை தொடர்ந்த மருத்துவர் கதிர்வேல், உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மாணவனின் மூக்கில் உயிருடன் இருந்த மீன் குஞ்சை வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர், மாணவன் குளித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கே தெரியாமல் மீன் குஞ்சு அவரது மூக்கில் சென்றுள்ளது. அதனை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் துரிதமாக செயல்பட்டு மீனை வெளியே எடுத்தோம் என தெரிவித்தார்.

