இன்று தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்

இன்று தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்
இன்று தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்

தமிழ்நாட்டில் 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் இடம்பெறும் அறிவிப்புகள் என்ன என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறமிருக்க, முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள சூழலில், 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது. பொதுவாக ஆண்டு தொடக்கத்திலும், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடரிலும் ஆளுநர் உரை இடம்பெறும். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் ஆளுநர் உரை இருக்கும். குறிப்பாக கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியது அரசின் சாதனையாக ஆளுநர் உரையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

மேலும் நிதி மேலாண்மை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர பொதுமுடக்கத்தின் போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி , பயண சலுகை உள்ளிட்டவை முடக்கப்பட்டது. இவற்றை மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது பற்றி ஆளுநர் தனது உரையில் குறிப்பிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரையை தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவுசெய்யும்.

ஆளுநர் உரை மீதான விவாதமும் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையும் நடப்பு கூட்டத்தொடரில் இடம்பெறும். அப்போது, மக்கள்நல திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேகதாது அணை, ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன.

கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நெகட்டிவ் என சான்று உள்ளவர்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனுமதிக்கப்படுவர். பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ள நிலையில், அதுபற்றி விரைவில் முடிவெடுக்கப்படுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com