நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் பாடல், கொடியை அறிமுகம் செய்துவைத்த விஜய், விரைவில் மாநாடு நடைபெறும் என்றும் அதில் கொள்கை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தவும், அதற்கான அனுமதி கேட்டு காவல்துறையிடமும் மனு அளித்தனர் கட்சியினர். மாநாட்டிற்கு காவல்துறை பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து “தமிழ்நாட்டைச் சேர்ந்த மகனாக, மக்களின் ஆதரவை கோருகிறேன்” எனக்கூறி அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்க தமிழக மக்களுக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள 23 முதல் 30 குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 12 நபர்கள் வரை இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்தக் குழுக்கள் அனைத்தும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட உள்ளதாகவும், மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.