சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
பட்டசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன்றி 6 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்துள்ளது. பட்டாசு தயாரிப்பில் வெடிமருந்து நிரப்பும் பணிகளின்போது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 20க்கும் அதிக அறைகள் தரைமட்டமாகி காட்சியளிக்கின்றன. வெடிவிபத்தின்போது உண்டான சப்தம் 6 கிலோமீட்டர் தொலைவு வரை கேட்டிருக்கிறது. ஊரே பதற்றமும், பரிதவிப்புமாக கூடியபோது அங்கு 9 உடல்கள் உடல்கருகி கிடந்தன.
மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பட்டாசு தயாரிப்பு வேலையில் ஈடுபட்ட ஒரு கர்ப்பிணியும், கல்லூரி மாணவியும் அடங்குவர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கண்ணன், விருதுநகர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தும், நிவாரணப்பணிகளை மேற்கொண்டும் பணிகளை துரிதப்படுத்தினர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது.