பல்லடம்: 60 அடி ஆழத்தில் தவறி விழுந்த சிறுவன்.. 15 நிமிடத்தில் உயிரோடு மீட்ட தீயணைப்புத் துறையினர்!

பல்லடம் அருகே பச்சாபாளையத்தில் பயன்பாட்டில் இல்லாத 60 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனை 15 நிமிடத்தில் தீயணைப்பு துறையினர் உயிரோடு மீட்டனர்.
சிறுவன் சுமன்
சிறுவன் சுமன்puthiya thalaimurai

பல்லடம் அருகே பச்சாபாளையத்தில் வசித்து வருபவர் மோகன்குமார். ஆட்டோ டிரைவரான மோகன்குமாருக்கு புனிதா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், மோகன் குமாரின் மகனான ஆறாம் வகுப்பு படிக்கும் சுமன், தனது நண்பர்களோடு இன்று கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அப்போது, பந்தைத் தேடி சென்ற சுமன், கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதாவது, தண்ணீர் வற்றி பயன்பாட்டில் இல்லாத 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று மூங்கில் தப்பைகள் மற்றும் சாக்கு பைகளால் மூடப்பட்டு இருந்துள்ளது.

அந்த கிணறு இருப்பது தெரியாமல் சிறுவன் சுமன் கிணற்றில் தவறி விழுந்து உள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி உள்ளே இறங்கி கிணற்றில் சிக்கித் தவித்த சிறுவனை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தலை மற்றும் கால் பகுதிகளில் காயம் அடைந்த நிலையில் உயிருடன் வந்த தனது மகனை கண்டு அவரது தாய் புனிதா கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

காயம் அடைந்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயன்பாட்டில் இல்லாத 60 அடி ஆழமுள்ள பொதுக் கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு சிறுவனின் குடும்பத்தாரும் பொது மக்களும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com