தஞ்சையில் தீ விபத்து: 52 வீடுகள் எரிந்து நாசம்
தஞ்சை மாவட்டம் சக்கராப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 வீடுகள் தீக்கிரையாகின.
நள்ளிரவில் ஒரு வீட்டில் பற்றிய தீ மற்ற வீடுகளுக்கு மளமளவென பரவியிருக்கிறது. தீ பரவியதை அறிந்து அனைவரும் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. வீடுகளில் இருந்த 4 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாகத் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாயின. இரவு நேரம் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இப்பணியில் தஞ்சை, திருவையாறு, அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை அமைச்சர் துரைக்கண்ணு, ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் தங்களது உடமைகள் வீடுகள் அனைத்தும் முழுமையாக எரிந்து விட்டதால் தங்களுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று சக்கராப்பள்ளி மக்கள் கேட்டுக் கொண்டனர்.