கொழுந்துவிட்டு எரியும் சரக்கு ரயில்... தீயணைப்பு துறையாலும் உள்ளே செல்ல முடியாத நிலை!
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
தீ கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
10 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக அரக்கோணம் வழியாக சென்டிரல் வந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை 5.50 செல்ல இருந்த மைசூர் வந்தேபாரத் ரயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதிகாலையிலேயே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழுந்துவிட்டு தீ எரிந்துவருவதால், தீயணைப்பு துறையினர் உள்ளே செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், 100 மீட்டர் தொலைவிலிருந்துதான் தீயணைக்கும் பணி நடைப்பெற்றுவருகிறது.
எனவே, அங்கே இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்தப்படும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆபத்தை உணராமல் மணவாள நகர் மேம்பாலத்தில் நின்று மக்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கின்றனர். அவர்களை பாதுகாப்பாக இருக்கவும், அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்துவருகிறார். முதற்கட்ட விசாரணையில் சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.