
சென்னை வானகரத்தில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை வழக்கம் போல் தொழிற்சாலையை மூடிவிட்டு அனைவரும் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் திடீரென தொழிற்சாலையின் ஒரு பக்கத்தில் தீப்பற்றியுள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து பூவிருந்தவல்லி, மதுரவாயில் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியாததால் அடுத்தடுத்து தீ அருகேயுள்ள கார் சர்வீஸ் சென்டர் மற்றும் டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலைக்கும் பரவியது. இதையடுத்து கோயம்பேடு, வளசரவாக்கம், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சுமார் 6 மணி நேராமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் தொழிற்சாலை முழுவதுமாக எரிந்து நாசமானது. அதேபோல் அருகேயுள்ள கார் சர்வீஸ் சென்டரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் தீயில் கருகின. மேலும் டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையிலும் பொருட்கள் சேதமடைந்தது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. குடியிருப்பு நிறைந்த பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்புவாசிகள் வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது நாசவேலை காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.