சசிகலாவுக்கான அபராதத்தை கைவிட முடியாது - வருமான வரித்துறை
குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது.
1994-95ம் ஆண்டுவரை வருமான வரி முறையாக செலுத்தவில்லை என கூறி வரி மற்றும் அபராதமாக ரூ.48 லட்சம் செலுத்த சசிகலாவுக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சசிகலா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வரி செலுத்தும் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்ததது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் 1 கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் என்பதால் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டது போல தனக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு வருமானவரித்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.