தடை மீறி போராட்டம்: ஜக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உத்தரவு
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள் வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் சேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 7ஆம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பல இடங்களிலும் போராட்டம் தொடர்ந்ததால், சேகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வரும் 15ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாக்டோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியன், தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இடைக்கால தடை தொடர்பாக நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை என வாதிடப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நீதிமன்ற நோட்டீஸை வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை வரும் 15ஆம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.