ஆவடியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஆவடி அருகே பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த இமயவரம்பன் மனைவி 48 வயதான குணவதி, கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததையொட்டி, அவருக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சலால் பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

