திடீரென சரிந்த சாலையோர மரம்... ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த பெண் பயணிக்கு நேர்ந்த துயரம்
சென்னையில் பிரதான சாலையொன்றில் ஆட்டோவொன்றின்மீது சாலையோர மரம் திடீரென விழுந்தத்தில், ஆட்டோவில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஷ்ரக்குமார் என்பவரின் மனைவி சூர்யா(38). இவர் சென்னை நந்தனம் பகுதியில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை சூர்யா ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது தியாகராய நகர், நார்த் போக்கு ரோடு பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று திடீரென சாலையில் சாய்ந்தது. சூர்யா சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில், ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த சூர்யா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர் உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரம் சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.