வாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்?
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒருவர் அனுமதியின்றி நுழைந்ததாக எழுந்த புகாரில், பெண் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண் அதிகாரி ஒருவர் சுமார் 2 மணி நேரம் ஆவணங்கள் உள்ள அறையில் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் தெரிவித்தார்.
பின்னர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சியினர் குவிந்து சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட வேண்டும் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் ஆகியோரும் மருத்துவக்கல்லூரிக்கு வந்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்து விசாரித்து பதிலளிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் கலெக்டர் நடராஜன் அங்கு வந்து விசாரணை நடத்தினார். அதில், அறைக்குள் சென்றது பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பது தெரிய வந்தது. அவர் சில ஆவணங்களை அவர் நகல் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாக உள்ளது.