திருவண்ணாமலையில் மீண்டும் பாறை உருண்டு விழும் அச்சம்.. 200க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிகளில் தஞ்சம்!
திருவண்னாமலையில் மீண்டும் பாறை உருண்டு விழும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிகளில் தங்கள் குடும்பங்களுடன் தஞ்சமடைந்தனர்.
கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலையையும் புரட்டி போட்டது என்றே சொல்லலாம். திருவண்ணாமலையை கடந்து சென்ற ஃபெஞ்சல் புயல் மூன்று இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தி விட்டு சென்றது. இந்த நிலச்சரிவால் ஏழுபேர் மண்ணில் புதையுண்டு இறந்தனர்.
இந்நிலையில் நாளை திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில், மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையானது உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் கனமழையும் நாளை மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை பவுர்ணமி மற்றும் மகா தீபத்தை முன்னிட்டு கிரி வலம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொட்டும் மழை என்று பாராமல் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்ற நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் நிலச்சரிவு ஏற்பட்டப்பொழுது, ஒரு பாறையானது உருண்டு மலையின் நடுவில் அபாயமாக நின்றிருப்பதால் தற்பொழுது பெய்து வரும் மழையால் அப்பாறையானது மீண்டும் உருண்டு விழும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் வசித்து வந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் தஞ்சமடைந்து இருக்கின்றனர்.