காதல் விவகாரம்: கர்ப்பிணி மகளை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற தந்தை
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகளை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் தந்தையே கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாழவந்தால்புரத்தைச் சேர்ந்த சிவசங்கரன், கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் நாகையாபுரத்தைச் சேர்ந்த சுஸ்மா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி சிவகங்கரனை திருமணம் செய்து கொண்ட சுஸ்மா, அவருடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், 2 மாத கர்ப்பிணியாக உள்ள சுஸ்மா டி.புதுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பரிசோதனைக்காக வந்துள்ளார். இதையறிந்த அவரின் தந்தை வாலகுருவன், மகளைச் சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ளார். முதலில் பாசமாக பேசுவதுபோல் அருகில் சென்ற அவர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுஸ்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் அடைந்த அவர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற வாலகுருவனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்த மகள், கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தும், தந்தையே கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.