4 வயது மகளுடன் 3வது மாடியிலிருந்து குதித்த தந்தை - சென்னையில் சோகம்
சென்னையில் 4 வயது மகளுடன் 3வது மாடியிலிருந்து தந்தை குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (35). இவருக்கும் சுனிதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஹரிஷ் என்ற (7) மகன் உள்ளார். அத்துடன் ஹரிகா (4) என்ற மகளும் இருந்தார். திருப்பதி சென்னை பாரிமுனையில் உள்ள பூண்டு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் சில மாதங்களாக மன அழுத்த நோய் காரணமாக, மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தனது 4 வயது மகளை 3வது மாடிக்கு தூக்கிச் சென்று, அங்கிருந்து மகளுடன் கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாதவரம் பகுதியில் திடீரென தந்தை, மகளுடன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.