”7 ஆண்டுகளா உறுப்பு செயலிழப்பு... இப்போ கோமா” - மகனை மீட்க போராடும் பெற்றோர்
விபத்தொன்றில் உறுப்புகள் செயலிழந்து 7 ஆண்டுகளாக நடக்கமுடியாமல் அவதியுறும் தஞ்சையை சேர்ந்த மாணவரொருவருக்கு, விபத்து காப்பீடு கூட கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். இவ்விவகாரத்தில் அரசு தங்கள் குடும்பத்துக்கு ஏதாவது உதவினால் மிகவும் பயனாக இருக்குமென அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் பொட்டுவாச்சாவடி, கண்டிதம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் சேவியர். தனியார் நிறுவனமொன்றில் லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த ஓர் ஆண்டாக ஊரடங்கு சூழலினால் வேலை இன்றி தவித்துவந்துள்ளார். லாரி டிரைவரான இவரின் குடும்பத்தில், மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் என இவரின் வருமானத்தை நம்பி நான்கு பேர் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகன் ஸ்டாலின், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்திருக்கிறார். தினமும் ரயில் நிலையத்திற்கு சைக்கிளில் சென்று, சைக்கிளை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு ரயிலில் கல்லூரிக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருந்திருக்கிறார் ஸ்டாலின். அப்படி கடந்த 4.9.2015 அன்று கல்லூரிக்கு சைக்கிளில் சென்றபோது தஞ்சை பர்மா காலனி - கலைஞர் காலனி அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்காக பல லட்சம் செலவு செய்தும் அவருடைய உயிரை மட்டுமே குடும்பத்தினரால் காப்பாற்ற முடிந்திருக்கிறது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும்கூட, எந்த சிகிச்சையும் ஸ்டாலினுக்கு உதவாமல் போயிருக்கிறது. சிகிச்சை பலனளிக்காமல் போனதால், தற்போது உடல் உறுப்புகள் செயல் இழந்து படுத்த படுக்கையாகியுள்ளார் ஸ்டாலின்.
இதற்கிடையில் கடந்த 2016ம் ஆண்டில், தஞ்சாவூர் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் இந்த விபத்துக்கான இழப்பீட்டு இன்சூரன்ஸ் தொகையை ஒதுக்க மாணவன் ஸ்டாலின் தந்தை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், ரூ 30 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து, தற்போது வழக்கறிஞரொருவர், ‘ரூ.29324 முன்பணம் செலுத்த வேண்டும்’ என கூறி, அப்பணத்தை செலுத்தினாலும் ரூ. 30 லட்சம் வருவது சந்தேகமே என கூறியுள்ளார். இந்த முன்பண தொகையான ரூ.30,000த்தை எப்படி திரட்டுவது என்று தெரியாததால், மேற்கொண்டு இன்சூரன்ஸ் தொகையை பெறாமல் விட்டுள்ளனர் ஸ்டாலினின் குடும்பத்தினர். இந்த போராட்டங்களுக்கு இடையில், ஸ்டாலினுக்கு விபத்து ஏற்படுத்திய நபரும் வேறொரு விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
ஸ்டாலின் நிலைகுறித்து அவருடைய தாய் லாரன்ஸ் மேரி கூறுகையில், “எனது மகன் ஸ்டாலின் ஏழு வருடங்களாக கோமாவில் இருந்து வருவதால் எனது குடும்பமே சீர்குலைந்து போயிருக்கிறது. மனதளவில் எல்லோருமே நம்பிக்கை இழந்துவிட்டோம். இரண்டாவது மகனான ஸ்டாலினின் உடல் உறுப்புகள் யாவும் செயலிழந்த காரணத்தால், அவருடைய மருத்துவ செலவுகள் முன்பைவிட அதிகமாகியுள்ளது. இதனால் எனது மூத்த மகன் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு தற்போது விவசாய தொழிலுக்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார். அதிலும் போதிய அளவுக்கு வருவாய் இருப்பதில்லை.
நாளொன்றுக்கு ஸ்டாலினுக்கு இயன்முறை மருத்துவம் கொடுக்கவும், பழச்சாறு - சத்தான நீர் உள்ளிட்டவை வாங்கி தருவதற்கும் மட்டுமே 700 ரூபாய் வரை செலவாகிறது. இதன்படி பார்த்தால், ஸ்டாலின் செலவுக்கு மட்டும் நாங்கள் ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. அவ்வளவு பெரிய தொகைக்கு, நாங்கள் எங்கே செல்வோம்? உறவினர்களிடம் நிறைய கடன் வாங்கினோம். நண்பர்கள் உறவினர் மூலமாக ரூ 18 லட்சம் வரை ஸ்டாலினுக்கு மருத்துவ செலவு செய்துள்ளேன். இப்போது கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு யாரிடமும் கடன் வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்கிறார் வேதனையுடன்.
தந்தை சேவியர் கூறுகையில், “இவ்வளவு கடன் வாங்கி கவனித்துக்கொண்ட போதும், ஸ்டாலினின் உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனது குடும்பம் தற்போது பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இனி வரும் நாட்களில் எனது மகன் ஸ்டாலினின், மருத்துவ செலவுக்கு செலவு செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறதும்கூட... இப்போதைய நிலவரப்படி, எங்கள் மகன் ஸ்டாலின் கோமாவில் இருக்கிறார். எப்படி சூழலை சமாளிக்க போகிறோம் என தெரியவில்லை.
எங்கள் சூழலை சரிசெய்ய, தமிழக அரசு சிறப்பு மருத்துவர் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து தகுந்த சிகிச்சை அளித்து ஸ்டாலின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். மேலும் விபத்து தொடர்பான வழக்கை அரசு சிறப்பு கவனம் செலுத்தி அரசு செலவில் நியாயமான வழக்கறிஞர் வைத்து, உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும்” என்கிறார் வேதனையுடன்.
இவர்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பு என்னவிதமான நடவடிக்கை எடுக்குமென பார்ப்போம்!
- காதர் உசைன்