பணத்திற்காக தந்தை அடித்து கொலை: தாய், மகன் கைது
நாமக்கல்லில் பணத்திற்காக தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து கம்பியால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மேலப்பட்டி மேலதோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், ராஜ்குமார் என்ற மகனும் இருக்கிறார்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் செல்வராஜ் தனது தோட்டத்தில் வீடு கட்டி வந்தார். இதற்கு மகன் ராஜ்குமார் பண உதவி செய்த நிலையில், வீட்டிற்கான கடைசி தவணைத் தொகையான 55 ஆயிரம் ரூபாய் செல்வராஜின் வங்கிக்கணக்கில் வந்துள்ளது. இதை தருமாறு மனைவி பாப்பாத்தியும், மகன் ராஜ்குமாரும் செல்வராஜை கேட்டுள்ளனர். அப்போது 35 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்த நிலையில், 20 ஆயிரம் ரூபாயை தர செல்வராஜ் மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியதில் தந்தை செல்வராஜை, தாயுடன் சேர்ந்து கம்பத்தில் கட்டிவைத்து கம்பியால் அடித்துள்ளார் ராஜ்குமார். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட விவசாயி செல்வராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் ராஜ்குமாரையும், பாப்பத்தியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜை பிரிந்து சென்ற மனைவி பாப்பாத்தி தனது உழைப்பில் மகன் ராஜ்குமாரை ஆளாக்கி டிப்ளமோ வரை படிக்க வைத்தார். 2 ஆண்டுகளுக்கு முன் செல்வராஜூடன் இருவரும் சேர்ந்த நிலையில், அண்மையில் மீண்டும் தகராறு செய்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில்தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.