இடத் தகராறில் தந்தை மகள் அடித்துக் கொலை - 4 பேர் தலைமறைவு

இடத் தகராறில் தந்தை மகள் அடித்துக் கொலை - 4 பேர் தலைமறைவு
இடத் தகராறில் தந்தை மகள் அடித்துக் கொலை - 4 பேர் தலைமறைவு

இடப் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தையும் மகளும் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட மேலப்பாளையம் வேடுவர் பகுதியை சேரந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி சூரியசந்திரமதி. இவர்கள் இப்பகுதியில் சொந்த வீட்டில் கடந்த 16 வருடங்களாக வசித்து வருகின்றனர். தங்கமுத்து மதுரையில் டீக்கடை நடத்தி வருகிறார். குடும்ப நிகழ்ச்சி, விழாக்காலங்களில் இவர் மேலப்பாளையத்தி்ற்கு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது பொங்கல் திருவிழாவிற்காக வந்துள்ளார்.

இவரது வீட்டிற்கும் அருகிலுள்ள ஜெயராஜா என்பவர் வீட்டிற்குமிடையே ஒரு குறுக்குச்சுவர் இருந்துள்ளது. அது சம்பந்தமாக இருவருக்கும் இடப்பிரச்னை இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தால் அடிக்கடி இருவருக்கும் தகராறு நடக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகை அன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்த இடப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் தங்கமுத்துக்கு சாதகமாக தீர்ப்பும் வந்துள்ளதாக தெரிகிறது.

தங்கமுத்துக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகள் சுமதி என்பவர் கணவர் ஆறுமுகத்துடன் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் குடியிருந்து வருகிறார். சுமதி மேலப்பாளையம் உழவர்சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையொட்டி தனது தந்தையார் வீட்டிற்கு தனது மகன் ஜெகதீசுடன் வந்துள்ளார். அப்போது தந்தையும், மகளும் இடப்பிரச்னையுள்ள அந்தச் சுவருக்கு வெள்ளையடிக்க முயற்சித்ததாக தெரிகிறது. ஏற்கனவே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத நிலையில் ஆத்திரத்தில் இருந்த ஜெயராஜா தனது இரண்டு மகன்களுடன் தங்கமுத்துவிடம் தகராறு செய்துள்ளார்.

தகராறு முற்றவே மூன்று பேரும் சேர்ந்த தங்கமுத்து அவரது மகள் சுமதி ஆகியோரை வாளி மற்றும் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தகராறின் போது மகன் கண்முன்னேயே தாய் சுமதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தகவலறிந்தது மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இரண்டு பேர் உடலையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜெயராஜா மற்றும் அவரது மகன்கள் ஆகிய 3 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com