உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது - சென்னை உயர்நீதிமன்றம்
உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இலங்கை அகதி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி சிறப்பு அகதி முகாமில் உள்ள பி.சந்திரகுமார் உள்ளிட்ட சிலர், கடந்த 2013 ஆண்டு தொடர்ந்து 10 நாட்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சந்திரகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் 309 கீழ் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பூந்தமல்லி இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரசேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது எனவும் தற்கொலை முயற்சி வழக்கில் ஓர் ஆண்டுதான் தண்டனை என்றும் ஆனால் காவல்துறை ஓராண்டுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி ஆகாது என்று கூறி, சந்திரகுமாருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.