டெல்லியிலும் டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் : மாணவர்கள் ஆதரவு
விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் விளைநிலங்களில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில், இன்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கும், கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ஐஜேகே நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான பாரிவேந்தரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே இன்று தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.