சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெற்ற போராட்டம், தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடனான பேச்சுவார்த்தைக்கு பின் கைவிடப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் கூறி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சேப்பாக்கம் அருகே விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அய்யாக்கண்ணு, ' தலைநகரில் நிர்வாணமாக ஓடிவிட்டோம். தமிழகத்திலும் ஓடவிடாதீர்கள்' என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இரண்டாவது நாளாக இன்று காலையும் போராட்டம் தொடர்ந்ததால், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் போல், தமிழகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கருதப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அய்யாக்கண்ணு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, சேப்பாக்கத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ' கரும்பு நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கொடுத்துள்ளார். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், இரண்டு மாதத்தில் மீண்டும் போராட்டம் தொடங்கும்' என்று தெரிவித்தார்.