விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத்தொகை வழங்கப்படாததை கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகலை அடுத்த ஒத்தூர் மற்றும் துறையூர் கிராமங்களில் நடந்த இந்த போராட்டத்தின்போது, மாடுகளுக்கு பதிலாக, விவசாயிகளே ஏரில் பூட்டிக்கொண்டு நிலத்தை உழுதனர். காளைகளை பூட்டி நிலத்தை உழுவதற்கு கூட தங்களிடம் பொருளாதார வசதி இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஒத்தூர் மற்றும் துறையூர் கிராமங்களில் 145 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுதொகை வழங்கப்படவில்லை என்றும், அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்த தங்களுக்கு தற்போதைய மழையும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், பாதிப்புகளை ஆய்வு செய்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்துவட்டிக்கு பணம் வாங்கி விவசாயப்பணிகளை மேற்கொள்ளும் நிலை இருப்பதால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வறட்சியாலும், வெள்ளத்தாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் கடைமடை பகுதிகளில் நிரந்தர தீர்வு காண, வடிகால் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் இதன் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, கடல் நீர் உட்புகுவதும் தடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.