வேளாண் சட்டங்கள்... "எங்களுடன் விவாதிக்க வரலாம்!" - பாஜக தலைவர்களுக்கு சீமான் அழைப்பு
வேளாண்மை பாதிப்பு என்பது நாட்டு மக்களுக்கான பாதிப்பு என்றும், அதனை விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்னையாக பார்க்கக்கூடாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "வேளாண்மை பாதிப்பு என்பது நாட்டு மக்களுக்கான பாதிப்பு. இதனை விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்னையாக பார்க்கக்கூடாது. இந்தச் சட்டமானது அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.
இந்த சட்டத்தின் நன்மைகளை பாஜக தலைவர்கள் விளக்கி கூறவேண்டும் அல்லது எங்களுடன் விவாதத்திற்கு வரலாம். எந்த சட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறீர்கள் என்றால், எதிர்ப்பு தெரிவிக்கிறது போல நீங்கள் ஏன் சட்டத்தை கொண்டு வருகிறீகள்” என்றார்
கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய சீமான் “விரும்பியவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும். மாணவர்களை தடுப்பூசி போட்டால்தான் பள்ளிக்கு அனுமதிப்போம் என்று கூறுவதை ஏற்க முடியாது” என்றார்.