பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.26 லட்சம் மெகா மோசடி - விவசாயிகள் பரபரப்பு புகார்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.26 லட்சம் மெகா மோசடி - விவசாயிகள் பரபரப்பு புகார்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.26 லட்சம் மெகா மோசடி - விவசாயிகள் பரபரப்பு புகார்

திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.26 லட்சம் மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஒன்று திருவாரூர். இம்மாவட்டத்தின் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள திருவீழிமிழலை ஊராட்சியில் தென்கரை,மேலதண்டம், முதல்கட்டளை, திருவிழிமிழலை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் ஒட்டுமொத்தமாக சுமார் 500 ஹெக்டேர்  பரப்பளவு  கொண்ட சாகுபடி நிலங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் இந்த ஊராட்சிக்குட்பட்ட 4 ஊர்களில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டதாகவும், ஆனால்  பயிர் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கணக்கு காட்டி, இந்த நான்கு ஊரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், விவசாயிகளின் சிட்டா  உள்ளிட்ட ஆவணங்களை முறைகேடாக பெற்று 26 லட்சத்து 77 ஆயிரத்து 644 ரூபாயை காப்பீடாக அரசிடம் இருந்து பெற்று பங்கு பிரித்து கொண்டுள்ளதாக திருவீழி மிழலை ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அதற்கு ஆதாரமாக அந்த விவசாயிகள் தங்கள் நிலங்களின் ஆவணங்களை பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்களின் பெயரில் கிராம நிர்வாக அலுவலரின் துணையோடு பெற்று மேற்கண்ட, பத்துக்கும் மேற்பட்ட குடும்ப நபர்களின் வங்கிக் கணக்குகளை கொடுத்து காப்பீட்டுத் தொகையை கட்டி இந்த மோசடி செய்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த திருவீழி மிழலை ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உளுந்து பயிரிடப்பட்டதே இல்லை என்றும் விவசாயிகள்  தெரிவித்துள்ளார்கள். உளுந்து பயிரிடாமலே பயிரிட்டதாக கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கல் வாங்கி, காப்பீட்டுத் தொகை கட்டி அதன் பிறகு வேளாண்மை துறை மற்றும் காப்பீட்டு அதிகாரிகள் உளுந்து பயிர் பாதிக்கப்பட்டதாக சான்றிதழ் கொடுக்கப்பட்டு இந்த மெகா மோசடி நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இவ்விவகாரம் வெளிவந்ததும் விவசாயிகள் இரண்டு முறை சாலை மறியல் செய்தனர். அதன் பிறகு குடவாசல் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டமும் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

குறிப்பாக திருவீழி மிழலை கோயில் நிர்வாகி மற்றும்  திருவீழி மிழலை கூட்டுறவு சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், தன்னுடைய ஓட்டுநர் பெயரிலும் சிட்டா அடங்கல் வாங்கி முறைகேடு செய்துள்ளார்கள் என விவசாயிகள் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் அவர் தன் குடும்ப உறுப்பினர்கள், மகள், மகன் என அனைவர் பெயரிலும் திருவீழி மிழலை கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சிட்டா அடங்கல் வாங்கி உளுந்து பயிர் செய்ததாக காப்பீட்டுத் தொகை கட்டி காப்பீட்டு நிவாரணம் பெற்றுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த 20 ஆண்டுகளாக உளுந்து பயிர் செய்யப்படாத இடத்தில் முறைகேடாக பல விவசாயிகளின் சிட்டா அடங்கலை சிலருக்கு உளுந்து பயிர் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் பொன்மணி ஏன் கொடுத்தார் என்றும் உளுந்து பயிர் செய்யப்படாத இடத்தில் உளுந்து பயிர்  பாதிக்கப்பட்டதாக வேளாண்மை உதவி அலுவலர் சிவராமன் எவ்வாறு கணக்கீடு செய்தார் எனவும் மேலும் வேளாண்மை துறையோடு இணைந்து பயிர் பாதிப்பை அளவிடும் செய்யும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் எவ்வாறு இருபது ஆண்டுகளுக்கு மேலாக உளுந்து பயிர் செய்யப்படாத இடத்தில் உளுந்து பயிர் செய்யப்பட்டதாகவும் அது பாதிக்கப்பட்டதாகவும் அதுவும் 80.40% பாதிக்கப்பட்டதாகவும் சான்று அளித்துள்ளார்கள் எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆக வருவாய்த்துறை, வேளாண்மை துறை, திருவீழி மிழலை ஊராட்சியில் பணியாற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இந்த மெகா மோசடியை அரங்கேற்றம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் இந்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல்  அதிகாரிகள் ஏன் சமாதான கூட்டம் வைக்க வேண்டும் எனவும் அவர்கள்  கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், ''காப்பீட்டுத் தொகை அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை திருவாரூர் மாவட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆகவே அது குறித்து தற்போதைய தமிழக அரசு விசாரித்து அதிகாரிகள் அல்லது யாராக இருந்தாலும் முறைகேடு செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

-மாதவன் குருநாதன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com