‘ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி தேவையில்லை’ - அரசின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

‘ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி தேவையில்லை’ - அரசின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
‘ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி தேவையில்லை’ - அரசின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு இனி சுற்றுச்சூழல் அனுமதி பெறவோ பொது மக்களிடம் கருத்து கேட்கவோ தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விவசாய சங்கங்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை.

ஆனால் இதற்கு மாறாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு இனி சுற்றுச்சூழல் அனுமதி பெறவோ பொது மக்களிடம் கருத்து கேட்கவோ தேவையில்லை என்ற உத்தரவு டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து, தமிழக மக்களின் நலனைக் காக்க அதிமுக அரசு முன்வர வேண்டுமென ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி செல்வராஜும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜனநாயகமற்ற நடைமுறைகளின் மூலம், பாரதிய ஜனதா அரசு மக்களுக்கான அரசு இல்லை என்பது தெரியவருவதாக சாடியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், அது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த சேதுராமன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான நடைமுறைகளை மத்திய அரசு தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் புதிய உத்தரவு விவசாயிகளுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ள, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன், உயிரை பணயம் வைத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுப்போம் என எச்சரித்துள்ளார். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை கொண்டுவந்தால், மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டரில், “ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பி.க்களை வைத்திருக்கின்ற தி.மு.க.வும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com