'போராடினால் இதுதான் நிலையா?' விவசாயிகளை மீது போடப்பட்ட குண்டாஸ்; முதல்வர் அறிவிப்பின் பின்னணி என்ன?

தமிழக அரசு செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு நிலங்களை மீண்டும் கையகப்படுத்துமா? அல்லது கைவிட்டு செல்லுமா? என்ன நடக்கிறது?
செய்யாறு போராட்டம்
செய்யாறு போராட்டம் file image

பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றி அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தையும் வாங்கி கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைத்தால் யாருக்குத்தான் கோபம் வராமல் இருக்கும்.

அப்படி கோவம் வந்து போராடிய விவசாயிகள் மீது தான் குண்டாஸ் பாய்ந்திருக்கிறது.

"தங்களின் வழவதாரமே இந்த நிலம் தான் இதை விட்டு நாங்கள் என்ன செய்வோம்" என விவசாயிகள் சிந்தும் கண்ணீருக்கு யார் காரணம்? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுகின்றது. தங்களுடைய மண்ணை விட்டு கொடுக்க மட்டோம் என கூறி கொண்டு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் மக்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், அருகே உள்ள செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்சாலை பூங்கா அமைப்பதற்காக முதல்கட்டமாக 645 ஹெக்டோர் பரப்பளவு கொண்ட நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி சிப்காட் தொழிற்சாலை அமைக்கபட்டது. இந்த இடத்தில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அதே பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம் செய்த அரசு 2300 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி 2 ஆம் கட்டமாக சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்கம் செய்து அதன் மூலம் 31645 பேர் நேரடியாகவும், 1லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இதனையயடுத்து சிப்காட் தொழிற்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால் 3 கட்டமாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிப்காட் செய்யாறு அருகே மேல்மா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான 8 கிராமங்களில் உள்ள சுமார் 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீட்டு பணிகளை தமிழக அரசு தொடங்கி அதற்கான பணிகளை தொடங்கியது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 20812 ஏக்கர் தரிசுநிலமும், 632 ஏக்கர் பட்டா நிலமம் கையகப்படுத்தபடும் என கூறப்பட்டிருந்தது. சிப்காட் அலகு 3 ல் தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், மேல்மா, நெடுங்கல், இளநீர்குன்றம், நர்மா பள்ளம், வட ஆளப்பிறந்தான், அத்தி, ஆகிய 9 கிராமங்கள் அடங்கியுள்ளன. முப்போகம் விளையும் நிலத்தை தரிசு நிலம் என வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டக்களத்தில் குதித்து தொடர்ந்து பல நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு போராட்டம்
திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடக்கிறது கந்த சஷ்டி விழா!

நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வந்த போதிலும் அரசு விவசாயிகளின் கண்ணீருக்கு, கதறலுக்கும் கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. விவசாயிகளும் தங்களுடைய நிலத்தை விட்டு கொடுக்கமாட்டோம் என்று உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன முறையில், காத்திருப்புப் போராட்டம் நடை பயணம், சாலை மறியல், கருப்பு கொடி கட்டி ஆர்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம், அரசியல் கட்சி ஆதரவுடன் ஆர்ப்பாட்டம், என விவசாயிகள் அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசு தெளிவான பதில் அளித்தால் மட்டுமே போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த போராட்டம் கடந்த 02-07-2023 அன்று தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில் தென்னங்கீற்றில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பாமக, விசிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இந்த போராட்டம் தற்போது 126 நாட்களை எட்டியுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, காவலர்களை தாக்கியது உள்ளிட்ட பலவேறு பிரிவுகளின் கீழ் 20 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்யராஜ், சோழன், விஜயன் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செய்யாறு போராட்டம்
"சாமி சும்மா விடாது" - கோவில் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்குச் சாபமிட்ட பெண்கள்!

சிப்காட் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்தனர். இதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆடு மாடுகளை ஓப்படைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் 4 மாவட்ட எஸ்.பி, 4 ஏடி.எஸ்.பி,30 காவல் ஆய்வாளர்கள், அதிரடி படையினர், பட்டாலியன், மற்றும் ஆயுதப்படை போலீசார் என 800 க்கும் மேற்பட்ட போலீசார் மேல்மா, குரும்பூர் காட்டுகுடிசை நர்மாபள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளை வேலூர், மதுரை, பாளையங்கோட்டை, புழல் என பல்வேறு சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், "எங்களுடைய வீட்டிற்கு நள்ளிரவு 2 மணிக்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லி அழைத்து சென்றனர். எங்க வீட்டு பிள்ளைகள் அப்பா எங்கே என கேட்டு அழுகின்றனர். எங்களுக்கு போலீஸ் எதுக்கு அழைச்சிட்டு போனாங்கனு தெரில. எங்க பிள்ளைகளுக்கு என பதில் சொல்வது என்று புரியவில்லை. எங்களிடம் இருக்கும் நிலத்தையும் கேட்டு அதிகாரிகள் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

எங்களுடைய நிலத்தை கேட்க அவர்கள் யார்?. எங்கள் கணவர்கள் மீது, சாராயம் விற்றுள்ளனர், விபசாரம் செய்கின்றனர், என பொய்யான குற்றசாட்டுகளை வைத்து நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து எங்களை தாக்கிவிட்டு இழுத்து சென்றனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை, "குண்டாஸ் கேஸ்" என்றால் என்ன என்பது கூட தெரியவில்லை. எங்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எங்களால் வெளியில் வருவதற்கு கூட முடியவில்லை எங்களுடைய நிலம் எங்களுக்கு முக்கியம்.கொலை செய்தால் கூட கவலையில்லை” என கண்ணீருடன் தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சிப்காட் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடத்தினர். மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினர்.

இந்தநிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு, "அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகளே இல்லை. தொழிற்பேட்டை வேண்டுமென்று அரசிடம் முறையிட்டோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தான் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணையை வெளியிட்டது.அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தற்போதைய அரசின் மதிப்பை விட இரண்டரை மடங்கு அதிகமாக கொடுத்து தான் நிலத்தை வாங்குகிறோம். இருந்தாலும் 1851 விவசாயிகளின் நிலம் கையகபடுத்தப்பட உள்ளது. இதில் 231 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதிலும் சில பேர் தூண்டுதலாலேயே இவர்கள் இவ்வாறு தொடர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ.வ. வேலு
ஏ.வ. வேலு

விவசாயிகளை பழிவாங்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது. அதனால் விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தினர் மனுக்களை என்னிடம் அளித்துள்ளனர். இந்த மனுக்களை இப்பொழுதே எடுத்துக்கொண்டு சென்னைக்கு செல்கிறேன் அங்கு முதலமைச்சரிடம் பேசி இதற்கு நல்ல முடிவை எடுப்பேன்" என்றார்.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "மேல்மா சிப்காட்திட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்களில், 7 பேர் மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த குண்டாஸ் தொடர்பாக இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் @evvelu தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கிறது. குண்டாஸ் போட்டதற்கு ஒரு காரணம், “அவர்கள் 8வழிச் சாலைக்கு எதிராகவும் போராடினார்கள்” என்று.

அமைச்சருக்கு மறந்துவிட்டதா?

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8வழிச் சாலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள், 8வழிச சாலை தொடர்பாக திமுகவின் தலைவர் மிக்க் கடுமையாக, அன்றைய அதிமுக ஆட்சியை தாக்கி அறிக்கை வெளியிட்டார். ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமரை சந்தித்து மனுவளித்த போது, இந்த திட்டத்தை கைவிடும்படி கோரினார் முதல்வர்.

அப்படி 8வழிச் சாலைக்கு எதிரான போராடுவது தவறு எனில் நீங்கள் யாரை குற்றவாளிகள் என்று சொல்கிறீர்கள் என்று தெரிகிறதா அமைச்சரே?

“அந்த பகுதியை சேராமல், அருகாமை பகுதிகளில் இருந்து வந்து போராடுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பல்வேறு செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்வது என்பது நடைமுறை இயல்பு.

திமுகவின் தலைவர் ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக “நெடுவாசலில்” நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ அவர்களின் நடைபயணத்தை மதுரையில் துவக்கிவைத்ததும் திமுக தலைவர்தான். திமுகவின் எத்தனையோ சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்றுள்ளனர்.

அமைச்சரின் கூற்றுப்படி இவர்கள் அனைவர் மீதும் குண்டாஸ் போடப்பட்டியிருக்க வேண்டும்.

இது என்ன நிலைப்பாடு முதலில்,

செய்யாறு போராட்டம்
சொகுசு காரில் போக்குவரத்து விதியை மீறிய நடிகர் அல்லு அர்ஜுன் - அபராதம் விதித்த காவல்துறை

காசாவி்ல் குண்டு போட்டால், தமிழ்நாட்டில்தான் எதிர்ப்பு குரல் கிளம்பும், டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது பொய் வழக்கை ஆளும் பாஜக அரசு போட்டால் முதலில் தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்கள்தான் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

எங்கோ நடைபெறும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்ச்சமூகம், தனக்கு அருகாமையில் நடைபெறும் போராட்டத்திற்கு குரல் கொடுக்க கூடாதா? இதுதான் நீங்கள் கடைபிடிக்கும் ஜனநாயக மாண்பா அமைச்சரே?

அதுவும் இன்றைக்கு குண்டாஸை விலக்குவதாக ஒரு செய்தி குறிப்பு வெளிவந்துள்ளதே, அது அநீதியின் உச்சம்.

“இனிமேல் போராடமாட்டோம்” என்று போராடிய விவசாயிகளின் குடும்பத்தாரிடம் இருந்து ஒருவேளை அரசு எழுதிவாங்கியிருந்தால் அதுதான் சட்டத்திற்கு புறம்பானது. போராடும் உரிமைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ளது, அதை பறிப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது.

அமைச்சரின் ஜனநாயக தன்மையற்ற இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பத்திரிக்கை செய்திக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். செயல்பாட்டாளர் அருள் மீது போடப்பட்டுள்ள குண்டாஸையும் திரும்ப பெற கோருகிறோம்” என பதிவிடப்பட்டிருந்தது.

விவசாயிகளின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் " செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவிற்கு எதிரப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய கூடாது என்பதும், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழக அரசு மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்குமா? அல்லது கைவிட்டு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com