முதலமைச்சர் பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய வேளாண் பகுதியாக காவிரி டெல்டா பகுதி காணப்படுகிறது. இங்குள்ள விவசாய நிலத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், உள்ளிட்ட எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த முயற்சி எடுத்தது. இதனிடையே சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கு விவசாயிகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு நிலவியது.
இந்நிலையில் காவிரி பாசன விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த இருக்கின்றனர். இந்த விழா மார்ச் 7-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற இருக்கிறது. இதற்காக திருச்சி சுற்றுலா மாளிகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகள் அணி தலைவர் புலியூர் நாகராஜன், உள்ளிட்ட விவசாயிகள் பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சருக்கு வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ரங்கராஜன், முதலமைச்சர் சிறந்த செயல் வீரர் என்பதை நிரூபித்துள்ளார். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேளாண் மண்டலம் திட்டம் துணை நிற்கும் என தெரிவித்தார்.