பயிர்கள் கருகியதால் வயலிலே விவசாயி தூக்கிட்டு தற்கொலை
திருவாரூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி அருகே வெங்கட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி மேற்கொண்டிருந்தார். கடன் வாங்கி அவர் விவசாயம் செய்திருந்தார். இதனிடையே, பருவமழை பொய்த்ததாலும், போதிய நீரில்லாத காரணத்தினாலும் பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் மனமுடைந்த விஜயகுமார், தனது வயலிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர்.
விவசாயி தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பயிர்கள் கருகியதால்தான் அவர் உயிரிழந்ததாக, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில், பயிர்கள் கருகியதால் தூக்கிட்டும், மாரடைப்பு ஏற்பட்டும் இதுவரை 19 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.