கஜா புயலுக்கு தென்னைகளை பறிகொடுத்த விவசாயி தற்கொலை..!
கஜா புயல் எண்ணற்ற தென்னைகளை சாய்த்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துச் சென்றுவிட்டது. இப்புயலுக்கு தென்னைகளை பறிகொடுத்த தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு வேராக முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிப்புடன் நிற்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Read Also -> கஜா புயலில் பிறந்த ’கஜஸ்ரீ’- டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்
இந்நிலையில் கஜா புயலுக்கு தென்னைகளை பறிகொடுத்த தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தரராஜ். 5 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்திருந்தார். தேங்காய் வெட்டில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் தனது குடும்பத்தை நடத்தி வந்தார்.
ஆனால் கஜா புயலில் அனைத்து மரங்களும் அடியோடு வீழ்ந்துவிட்டதால் விரக்தியில் இருந்த சுந்தரராஜ், கடந்த சில தினங்களாக மன நிம்மதியற்று இருந்துள்ளார். இந்நிலையில் சுடுகாட்டில், விஷமருந்தி இறந்தநிலையில் சுந்தரராஜின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்னை பறிகொடுத்த விவசாயியின் இந்த மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.