வங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..!
வங்கியில் வாங்கிய கடன் தவணை தொகையை கட்டாததால் விவசாயிடமிருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன். விவசாய வேலைக்கு டிராக்டர் வாங்குவதற்காக அரியலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 9 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் இரண்டு தவணைத் தொகையை கட்டாததால் கடந்த 30-ஆம் தேதி டிராக்டரை பறிமுதல் செய்ய வங்கியின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கான கடிதமும் தேவேந்திரனுக்கு இன்றுதான் கிடைத்துள்ளது. அதில் தவணையை கட்ட 6-ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது.
ஆனால் அவகாசம் இருந்தும் வங்கி அதிகாரிகள் தேவேந்திரனின் டிராக்டரை இன்று பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த தேவேந்திரன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது