பூச்சி தாக்குதலில் பயிர்கள் வீணாகியதால் மன உளைச்சல்.. விவசாயி தற்கொலை

பூச்சி தாக்குதலில் பயிர்கள் வீணாகியதால் மன உளைச்சல்.. விவசாயி தற்கொலை
பூச்சி தாக்குதலில் பயிர்கள் வீணாகியதால் மன உளைச்சல்.. விவசாயி தற்கொலை

தூத்துக்குடி அருகே பூச்சி தாக்குதல் காரணமாக பயிர்கள் வீணானதால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார். பேத்தியிடம் ‌‌மன்னிப்புக்கேட்பதாக எழுதிவிட்டு உயிரைவிட்ட சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தினை சேர்ந்தவர் நாராயணசாமி.  நாராயணசாமி தனது மனைவி மகாலெட்சுமியுடன் மகள் அபிராமி வீட்டில் வசித்து வந்துள்ளார். ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் சில காலம் பணியாற்றி வந்த நாராயணசாமி ஓய்வுக்கு பின், தனது சொந்த ஊரான பிள்ளையார் நத்தத்தில் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தார். மக்காச்சோளம், உளுந்து ஆகியவற்றை அடுத்தடுத்து பயிர் செய்தபோது, அவை இரண்டுமே பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு வீணாகியது.

இந்நிலையில் இன்று காலையில் நிலத்திற்கு சென்று பயிர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார் நாராயணசாமி. பூச்சிகளால் பாதிக்கப்பட்ட  வயலைக் கண்டு மனம் உடைந்த அவர், அருகேயிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் நாராயணசாமி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாராயணசாமி , தனது பேத்தி மித்ரா மீது அதிக பாசம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தரையில் கிடந்த ஈரமான மண்ணை எடுத்து அங்குள்ள சுவற்றில் மித்ரா என்னை மன்னித்து விடு என்று எழுதி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com