கோவில்பட்டியில் மின்சார வாரிய அலட்சியத்தால் உயிரிழந்த விவசாயி? - பொதுமக்கள் போராட்டம்

கோவில்பட்டியில் மின்சார வாரிய அலட்சியத்தால் உயிரிழந்த விவசாயி? - பொதுமக்கள் போராட்டம்
கோவில்பட்டியில் மின்சார வாரிய அலட்சியத்தால் உயிரிழந்த விவசாயி? - பொதுமக்கள் போராட்டம்

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் தலையால் நடந்தான்குளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முண்டசாமி மகன் பாலமுருகன் (27) என்பவர் விவசாயம் செய்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று காலையில் ஊருக்கு வெளியேயுள்ள தனது தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கயத்தாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் பாலமுருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கயத்தாறு போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பாலமுருகன் உடல் தலையால் நடந்த குளத்திற்கு கொண்டுவரப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டார் போடும்போது மின்சாரம் தாக்கி பாலமுருகன் உயிரிழந்ததாக உறவினர்கள் கருதி இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு சென்றபோது, திடீரென மின்சாரம் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது அருகிலிருந்த கண்மாயில் இருக்கும் மின்கம்பங்களில் வயர்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்சார வயர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்த காரணத்தினால்தான் பாலமுருகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாகவும், இதற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் அங்கு உள்ள கண்மாயில் மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த பாலமுருகன் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கயத்தாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த பாலமுருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்று போலீசார் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

அக்கிராமத்தில் பல மின் கம்பங்கள் முற்றிலுமாக சேதமடைந்து விழும் நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை தோண்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com