மாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..!

மாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..!

மாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..!
Published on

சென்னையில் பல வீடுகளில் கொள்ளையடித்த திருடனை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்தவர் நிதி நிறுவன அதிபர் இமானுவேல் ஜெயசீலன் (41). இவரது வீட்டின் முன்பக்கம், மற்றும் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தனர். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றினர். அதில் தலைக்கவசம் அணிந்து கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியிருந்தது. அதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதேசமயம் தலைக்கவசம் அணிந்திருந்ததால் கொள்ளையனின் முகம் தெரியாமல் போலீசார் வழக்கின் அடுத்தக்கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் திணறினர்.

செல்போன் சிக்னல் பதிவுகளை கொண்டு விசாரித்தபோது, சம்மந்தப்பட்ட கொள்ளையனின் செல்போன் சிக்னல் மவுண்ட் ரோட்டை காட்டியது. சிக்னல் காட்டிய இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார், அண்ணா சாலையில் தனது மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையனை சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராமநாதபுர மாவட்டம், கமுதி முதுகுளத்தூரை சேர்ந்த ஜான் போஸ்கோ (34) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அவர் பம்மலில் தங்கி நோட்டமிட்டு, ஆள் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையை அரங்கேற்றியதாக ஒப்புக்கொண்டார். நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராமநாதபுரத்திற்கே சென்று பழைய வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பின்னர் சென்னையில் வந்து பதுங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்தக் கொள்ளையன் மீது சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனிடமிருந்து 70 சவரன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அனகாபுத்தூர் விநாயக நகரில் ஒரு வீட்டில் கொள்ளை போன வழக்கில் 30 சவரன் நகையும், பம்மல் வழக்கில் 40 சவரன் நகையும், 19 லட்சம் பணமும் மொத்தம் 70 சவரன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com