ஜனாதிபதி போல அத்தி வரதரை தரிசித்த ‘பிரபல ரவுடி’ - வி.வி.ஐ.பி பாஸ் கிடைத்து எப்படி ?
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி வரிசையில் அத்தி வரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரிச்சியூர் செல்வம் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளன. மூன்று முறை என்கவுன்டரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாக அவர் கூறினாலும், மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே சர்வதேச மனித உரிமை அமைப்பில் நிர்வாகியாக இருந்த வரிச்சியூர் செல்வம், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டும், நடித்தும் வந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதரை வரிச்சியூர் செல்வம் இன்று தரிசித்தார். அவர் தரிசித்ததில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பிரபல ரவுடியான அவர் வி.வி.ஐ.பி வரிசையில் சாமி தரிசனம் செய்தது எப்படி ? என்ற சர்ச்சையை வெடித்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இந்து அறநிலைய துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ, அதே இடத்தில் வரிச்சியூர் செல்வம் அமர்ந்து சாமி தரிசனம் செய்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பங்களுடன் பல மணிநேரங்கள் வரிசையில் நின்றும் கூட அத்தி வரதரை தரிசிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பிச் செல்லும் நிலையில், ஒரு ரவுடி ஸ்பெஷல் தரிசனம் செய்திருப்பது காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.