பச்சைப் பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அங்கமாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை தல்லாகுளத்தில் நடைபெற்ற எதிர்சேவைகளுக்குப் பிறகு, காலை 6 மணி அளவில் வைகை ஆற்றிற்கு வருகை புரிந்த கள்ளழகர், பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கானோர் வைகை ஆற்றில் குவிந்தனர். வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதையொட்டி, புனித நீர், பக்தர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் ராமராயர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரணை வைகை ஆற்றில் சித்திரா பௌர்ணமி தினத்தை யொட்டி ஆற்று தண்ணீரில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் இருகரைகளையும் தொட்டு ஓடியது. இந்நிலையில் அழகர் மாலப்பட்டி பெருமாள் கோவிலிருந்து புறப்பட்டு வைகை ஆற்றினை வந்தடைந்தார். ஆண்டு தோறும் ஆற்றில் அழகர் இறங்கும் பாதையில் பச்சை பட்டு அணிந்த அழகரை பக்தர்கள் இறக்க முயற்சித்தனர். ஆனால் அப்பகுதியை ஏற்கனவே மணல் கொள்ளையர்கள் தோண்டி ஆழப்படுத்தி இருந்ததால் அழகரை ஆற்றில் இறக்குவதற்கு சிரமம் ஏற்பட்டது.
ஆற்றுப்பகுதி முழுவதும் எங்கு பள்ளம் இருக்கிறது, எங்கு மேடு இருக்கிறது எனத் தெரியாமல் உயிரை பணயம் வைத்த பக்தர்கள் கள்ளழகரை ஆற்றில் இறக்கினர். ஆற்றில் சில அடிகள் தூரம் வரும்போது திடீரென இருந்த பள்ளத்தில் அழகரை சுமந்து வந்த பக்தர்கள் அனைவரும் கழுத்தளவு மூழ்கினர். ஆற்றின் வேகமும் அதிகமாக இருக்கவே கரையில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அழகர் ஆற்றை கடந்து ஆஞ்சிநேயர் கோவிலுக்கு எதிர்சேவைக்காக வந்தடைந்தார்.