10 ஆண்டுகளாக மின்சாரமில்லாமல் தவித்த குடும்பம் - விளகேற்றி வைத்த விஜய் ரசிகர்கள்

10 ஆண்டுகளாக மின்சாரமில்லாமல் தவித்த குடும்பம் - விளகேற்றி வைத்த விஜய் ரசிகர்கள்
10 ஆண்டுகளாக மின்சாரமில்லாமல் தவித்த குடும்பம் - விளகேற்றி வைத்த விஜய் ரசிகர்கள்

10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத வீட்டிற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் மின் வசதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுண்டன் குறிச்சி கிராமம். கிராமத்தில் 150 க்கும் அதிகமான வீடுகள் இருந்தாலும், ஒரு வீடு மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்தது. 

அந்த வீட்டில் கணவனை இழந்த புஷ்பம் என்ற பெண்மணி தன் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மூதாட்டியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி, அதன் மூலம் கிடைத்த சொற்ப வருவானத்தை கொண்டு குழந்தைகளையும் மூதாட்டியையும் கவனித்து வந்த புஷ்பத்தின் வீடு கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அங்கு இரண்டு மின் கம்பங்கள் அமைத்து அவர்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் அதற்கான பணத்தை புஷ்பத்தால் கொடுக்க இயலவில்லை. அதற்கான பரிசு, கிட்டத்தட்ட 10 வருடங்களாக புஷ்பத்தின் வீடு மின்சாரமின்றி இருள்மயமாக இருந்துள்ளது.

இதனிடையே நெல்லை மாவட்ட விஜய் மக்கள் மன்ற இணையதள அணியினர் விஜயின் ‘மாஸ்டர்’ பட வெற்றியை கொண்டாடும் விதமாக நலிவடைந்த கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களிடம் ரசிகர் ஒருவர் புஷ்பத்தின் வறுமை குறித்து தகவல் கொடுத்த நிலையில் புஷ்பத்திற்கு உதவ முன்வந்த அவர்கள் கடந்த 75 நாட்களாக மின்வாரியத்திடம் புஷ்பத்தின் வீட்டிற்கான மின் தேவைக்காக போராடியுள்ளனர். 

இதனையடுத்து அவர்கள் செலவிலே புஷ்பத்தின் வீட்டிற்கு மின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதற்கு 40 ஆயிரத்திற்கு மேலாக செலவாகியுள்ளது. இது மட்டுமன்றி புஷ்பத்தின் வீட்டை சீரமைத்து வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

இது குறித்து புஷ்பம் கூறும் போது, “இருட்டாய் இருந்த வீட்டுக்குள் இன்று வெளிச்சம் பிறந்திருக்கிறது. மின் விளக்குகள் எரிகிறது. மிக்சி சத்தத்துடன் இயங்குகிறது. ஃபேன் சுற்றுகிறது. 10 வருடமாக இது எதுவுமே இயங்காமல் இருந்த வீட்டுக்குள் இன்று எல்லாம் இயங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

இது குறித்து நெல்லை மாவட்ட விஜய் மக்கள் மன்ற இணையதள அணியினர் கூறும் போது, “ எங்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. வீட்டுக்கு ப்ரிட்ஜ் தேவை என்று கேட்டிருக்கிறார்கள். இந்த கோரிக்கையையும் நாளை நிறைவேற்றிக் கொடுக்க உள்ளோம்.” என்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com