பொய்வழக்கு போடுவதாக குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி
காவல்துறை பொய் வழக்கு போடுவதாக கூறி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீ குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இவர் திருந்தி குடும்பத்தினருடன் திருட்டு தொழிலை விட்டு கூலி செய்து பிழைத்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி நடைபெற்றது. அதில் தொடர்புடையதாகக்கூறி தன்னை போலீசார் துன்புறுத்துவதாகவும் மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் செய்யாத குற்றத்திற்காக தன்னிடம் நகை கேட்டு மிரட்டுவதாகவும், காவல்துறை தன்னை நிம்மதியாக வாழவிடவில்லை என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனைவி விக்டோரியா, மகள் மீனா, மகன் லட்சுமணன் மற்றும் மாமியார் அஞ்சலை ஆகியோருடன் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மணிகண்டன, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றுள்ளார். அப்போது அவர்களை மடக்கிய காவல்துறையினர், மண்ணெண்ணய் கேனை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர்.