”ஒரே நாளில் எப்படி கொலை வழக்கு தற்கொலை வழக்காக மாறியது?” - ஈரோடு மாணவி மரணத்தில் உறவினர்கள் போராட்டம்!

ஸ்வேதா மாற்று சமூகத்தினரால் ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.
போராட்டம்
போராட்டம்சுப்ரமணியம்

கோபிசெட்டிபாளையம் அருகே சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் கொலை வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது. பங்களாபுதூர் காவல்துறையின் இந்த நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகக்கூறி இறந்துபோன கல்லூரி மாணவியின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்பளாபுதூர் காவல்நிலையத்தில் ஒன்று கூடியதால் பரபப்பு ஏற்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டுமாரியம்மன் கோவில் அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கட்டும் விசாரணையை துரிதப்படுத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் கோபி கண்ணகி வீதி நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த குமார் - மஞ்சுளாதேவி என்பவர்களின் மகள் ஸ்வேதா(21) என்பதும், ஸ்வேதா கோபி கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும், கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்த நிலையில் கோபி காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்
போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்சுப்ரமணியம்

பின்னர் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கில் கட்டி கிணற்றில் வீசியது யார்? என்ற கோணத்தில் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ’ஸ்வேதா கோபி கலை அறிவியல் கல்லூரியில் தன்னுடன் படித்த கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த லோகேஷ் எனபவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு லோகேஷ் எம்.எஸ்.சி முடித்துவிட்டு கரட்டடி பாளையம் பகுதியில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்துள்ளார்.

ஸ்வேதாவும் லோகேஷும் அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் ஸ்வேதா கருத்தரித்துள்ளார். இதனை அறிந்த லோகேஷ் கருவை கலைப்பதற்காக ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு கோவை செல்ல திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு கோபி பேருந்து நிலையத்தில் இருந்து தனது காதலர் லோகேஷுடன் கோவை புறப்பட்டு சென்றுள்ளார்.

கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்- கோபிச்செட்டி பாளையம்
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்- கோபிச்செட்டி பாளையம்சுப்ரமணியம்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் கருவை கலைக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து லோகேஷும் ஸ்வேதாவும் கோவையில் இருந்து புறப்பட்டு கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டில் கருவை கலைப்பது தொடர்பாகவும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாலும் லோகேஷுக்கும் சுவேதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து லோகேஷை உணவு வாங்கி வருவதற்காக வெளியே அனுப்பியுள்ளார். பின்னர் அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, இந்த மரணத்தை மறைக்க சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார் லோகேஷ்’ எனத் தெரியவந்தது.

போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்
போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்சுப்ரமணியம் / செய்தியாளர்

இதனையடுத்து, மணவி சுவேதா என்பவரின் உடல் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று அது தற்கொலை வழக்குக்கு மாற்றம் செய்யப்பட்டு காதலன் லோகேஷ் என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், மாணவியின் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றிய பங்களாபுதூர் காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கூறி ஸ்வேதாவின் உறவினர்கள் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் ஒன்றுகூடினர். இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் ஒன்று கூடியவர்களை காவல் ஆய்வாளர் அழைத்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்
போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்சுப்ரமணியம்/செய்தியாளர்

பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாத நிலையில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன், ”மாணவி ஸ்வேதா மரணம் கொலை வழக்கிலிருந்து தற்கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர். ஸ்வேதா மாற்று சமூகத்தினரால் ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரே நாளில் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். ஸ்வேதாவின் மரணம் கூட்டுக்கொலை. இதனை போலீசார் மறைக்கின்றனர். சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுடைய குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் அனைத்து வகையிலும் போராடுவோம். இது தற்கொலை அல்ல கொலை; தனி நபரால் ஒரு பெண்ணை தூக்கிலிட்டு சாக்கில் கட்டி கிணற்றில் போட முடியாது; இது முற்றிலும் ஏமாற்றப்பட்டது.

போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்
போராட்டம் - கோபிச்செட்டி பாளையம்சுப்ரமணியம்/செய்தியாளர்

இந்தக் கொலைக்கு பின்னாலுள்ள குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும். அடுத்தகட்டமாக போராட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்க போராடுவோம். அமைச்சர்கள் மூலம் இதுகுறித்து பேசி சட்டசபையில் குரல் எழுப்புவோம். இதுகுறித்து முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்திக்க உள்ளோம். மாணவி மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்.

நாடகக் காதலால் ஏமாற்றப்பட்டு பெண்கள் மரணமடைவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com